அட்வைஸ் செய்த சைபர் க்ரைம்... திருந்தாத ஜென்மங்களின் நக்கல் பதிவுகள்...

மதனின் இன்ஸ்டா பக்கத்தில் அட்வைஸ் செய்த சைபர் க்ரைம் போலீஸார்.
அட்வைஸ் செய்த சைபர் க்ரைம்... திருந்தாத ஜென்மங்களின் நக்கல் பதிவுகள்...
Published on
Updated on
2 min read
தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை தனது யூ-டியூப் சேனல் மூலம் நேரலை ஒளிபரப்பு செய்து வந்த பப்ஜி மதன், தனது வீடியோக்களில் பெண்கள் குறித்து ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசிவந்தார். மேலும், பல ஆதரவற்றவர்களுக்கு தான் உதவி வருவதாகக் கூறி பண மோசடியிலும் அவர் ஈடுபட்டார். இந்த விவகாரம் சர்ச்சையாகி பின் சைபர் கிரைமுக்கும், மத்திய குற்றப்பிரிவுக்கும் புகார்கள் குவிந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் மதன் மீது வழக்குப்பதிவு செய்து அவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரின் மனைவி கிருத்திகாவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், மதனின் வங்கிக் கணக்குகளை முடக்கி அவரின் கார்களையும் மத்திய குற்றப்பிரிவு போலிசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கவும் சம்மந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு பரிந்துரைக் கடிதங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அனுப்பியிருந்தனர். அதனடிப்படையில் முதலில் பப்ஜி மதனின் யூ-டியூப் பாஸ்வேர்டை யூ-டியூப் நிறுவனத்திடம் பெற்று மதனின் வீடியோக்களை அகற்றியபின் சேனலையும் முடக்கினர்.
அதனைத் தொடர்ந்து இன்று மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, அதன் மூலம் இளைய சமூகத்தினருக்கு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அறிவுரைகள் பல வழங்கியும், தவறு செய்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்ற எச்சரிக்கையையும் விடுத்திருந்தனர்.
இந்நிலையில் சைபர் கிரைம் போலீசாரின் அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கை பதிவுகளை குறிவைத்து ஒருபுறம் மதனின் ரசிகர் பட்டாளம் நக்கலும், நையாண்டியுமாய் கமெண்டுகளை பதிவிடத் துவங்கியுள்ளனர். அதில் பலர் மதனுக்கு ஆதரவாகப் பேசியும், சிலர் நக்கலாக தவறான பாதையில் சென்ற தங்களின் கண்களை திறந்துவிட்டது போலீஸ் என்பது போல் பதிவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. மற்றொரு புறம் பலரும் பப்ஜி-யை விடுத்து படிப்பில் கவனம் செலுத்துவதாகவும், தங்களை சரியான முறையில் வழிகாட்டிய காவல் துறையினருக்கு நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com