என்எல்சி தொழிலாளர் விவகாரம்; 8 வாரங்களில் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு!

என்எல்சி தொழிலாளர் விவகாரம்; 8 வாரங்களில் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு!
Published on
Updated on
1 min read

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை மீது எட்டு வாரங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி என்எல்சி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்கள் நிறுவனத்திற்கு வரும் பணியாளர்களை அதிகாரிகளை தடுப்பதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து போராட்டம் நடத்த தனி இடத்தை அடையாளம் காண சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தனி இடத்தில் போராட்டம் நடந்து வந்தது. 

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் என்எல்சி நிர்வாகத்துக்கு இடையிலான பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிப்பது குறித்து பதிலளிக்கும் படி என் எல் சி மற்றும் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது தொழில் தகராறு சட்டத்தின் படி உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியை பேச்சுவார்த்தைக்கு நியமிக்க முடியாது என்று என்எல்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் ஒப்பந்த தொழிலாளர்கள் தரப்பில் நீதிமன்ற நிவாரணத்தை எதிர்பார்த்து போராட்டத்தை திரும்ப பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கையை இரண்டு வாரங்களில் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அந்தக் கோரிக்கையை பெற்று எட்டு வாரங்களில் அதன் மீது சட்டப்படி உரிய முடிவெடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து முடிவெடுக்கும் வரை எந்த ஒரு போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என தொழிற்சங்கங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்

விசாரணையின் போது அணு மின் நிலையங்களும் அனல் மின் நிலையங்களும் மூடப்படும் நாளை இயற்கை ஆர்வலர்களும் இந் நீதிமன்றமும் எதிர்பார்த்து இருப்பதாக நீதிபதி தண்டபாணி குறிப்பிட்டார். அணுமின் நிலையம் அனல் மின் நிலையங்களுக்கு மாற்றாக சூரிய மின்சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி முறைகளை கையாள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

காவிரி நதி மீது சூரிய மின்சக்தி ஆலைகளை அமைத்தால் என் எல் சி இல் இருந்து கிடைக்கும் அளவுக்கு மின்சாரம் கிடைக்கும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com