கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் பிளஸ் 2 மாணவியின் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாகவும், நியாயம் கேட்டும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் நிலவி வரும் சூழல் வருத்தம் அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சம் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
மேலும், உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளதாகவும், தமிழக அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்து பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.