தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து அதிகாரிகள், விதிமீறலில் ஈடுபட்டதாக ரூ.2.11 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். உரிமம் மற்றும் பதிவுச் சான்று இல்லாமல் வாகனம் ஓட்டியது, விதிமீறல், அதிக அளவில் ஆட்களை ஏற்றிச் சென்றது போன்ற குற்றங்களின் கீழ் போக்குவரத்து அதிகாரிகள் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன்படி, விதிகளை மீறியதாக 2 ஆயிரத்து 406 குற்றங்கள் கண்டறியப்பட்டு, சுமார் 2 கோடியே 11 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், 368 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபோன்ற சோதனைகள் மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.