ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொள்கையே முபீனை தீவிரவாதி ஆக்கியதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், தீவிரவாதம் குறித்த முழு பயிற்சியும் பெறாததால், வெடிகுண்டுகளை கையாள முடியவில்லை எனவும் கூறியுள்ளன.
கோயம்புத்தூரில் உள்ள கோவிலுக்கு வெளியே நடந்த கார் வெடிகுண்டு சம்பவம் குறித்து என்ஐஏ தகவல் வெளியிட்டுள்ளது. என்ஐஏ தகவலின் படி, குண்டுவெடிப்பில் இறந்த 29 வயதான பொறியாளர் ஒரு தற்கொலை தாக்குதலாளர் எனக் கூறியுள்ளனர்.
இறந்த பொறியாளர் முபீனுக்கு வெடிகுண்டுகளைக் கையாள்வதில் அனுபவம் இல்லை என்றும், அதனால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்றும் மத்திய புலனாய்வு அமைப்பு கூறியுள்ளது. தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக அதிகாலை 4 மணியளவில் கோவை கோட்டமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கார் நின்றதாக குண்டுவெடிப்பை நேரில் பார்த்த ஒருவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததாகவும் அதில் இருந்து தரையில் குதித்த முபீன் பலத்த தீக்காயங்களுடன் இறந்தார்.
மேலும் காரில் இரண்டு எல்பிஜி சிலிண்டர்கள் இருந்ததாக என்ஐஏ கூறியுள்ளது. அதில் ஒன்று மட்டுமே வெடித்தது எனவும் மற்றொன்று வெடிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது. ஒருவேளை அதுவும் வெடித்திருந்தால், கோவிலுக்குச் செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள வீடுகளும் சேதமடைந்திருக்கும் என என்ஐஏ கூறியுள்ளது.