தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், சென்னை, எம்.ஆர்.சி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான இலச்சினையை வெளியிட்டார். ‘த’ என வடிவமைக்கப்பட்ட இலச்சினையை வெளியிட்டுப் பேசிய அவர், தமிழ், தமிழ்நாட்டின் பெருமை மற்றும் பண்பாட்டை விளக்கும் வகையில் இலட்ச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு, மிகவும் பிரம்மாண்டமாக இதுபோல் எங்கும் நடந்ததில்லை என்று பெருமை கொள்ளும் அளவுக்கு நடைபெற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மேலும், முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு பன்மடங்கு அதிகரிக்கும் எனவும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியனாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.