கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட நீட் நுழைவு தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. நாடு முழுதும் 202 நகரங்களில் 3 ஆயிரத்து 862 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றி தேர்வு நடத்தப்படுகிறது. அதில், 16 லட்சத்து 14 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 18 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 971 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். வழக்கமான தேர்வு விதிமுறைகளோடு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுடன் இணைந்து தேர்வு நடத்தப்படுகிறது. இந்தநிலையில் நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை சில அறிவுரைகளை வழங்கி உள்ளது.
அதில், தேர்வு மையங்களில் புதிய என்.95 மாஸ்க் தரப்படும் என்றும், மாணவர்கள் ஹால்டிக்கெட், 50மி. சானிடைசர் பாட்டில், குடிநீர் பாட்டில் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் தேர்வுக்கு 1.30க்கு பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், தேர்வுக்கு முந்தைய 14 நாட்களில் கொரோனா அறிகுறிகள் இருந்ததா போன்ற விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ள அந்த அறிக்கையில், ஹால் டிக்கெட்டின் முதல் பக்கத்தில் கொரோனா குறித்த சில விவரங்களை பூர்த்தி செய்யவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.