தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டதால் இறந்த குழந்தையின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் மடிகை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் கீதா தம்பதியர். இவர்களுக்கு தரணிகா என்ற பத்து மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று குழந்தைக்கு பத்து மாத தடுப்பூசி போட வேண்டுமென துறையூர் அங்கன்வாடி மையத்தில் இருந்து தொலைபேசி மூலம் பெற்றோர்களை அழைத்துள்ளனர்.
இதனால் நேற்று காலை கீதா குழந்தையை தூக்கிக் கொண்டு துறையூர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளார். இந்நிலையில் தடுப்பூசி போட்ட வேகத்தில் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை இதனை அடுத்து உடனடியாக அருகில் உள்ள காசவளநாடு புதூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை தூக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு மேலும் ஊசியை செலுத்தி உள்ளனர் .இதனால் குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமானது.
இதனையடுத்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவரின் காரியிலேயே குழந்தையும் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு தஞ்சை அரசு இராசமிராசுதார் மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தாய் கீதா கூறகையில்:-
தடுப்பூசி போட்ட வேகத்தில் குழந்தையின் உடல்நிலை மோசமானது. இதன் அடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம். அங்கேயும் குழந்தைக்கு ஊசி போடப்பட்டதால் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமானதால் மருத்துவரின் காரிலேயே தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அரசு மருத்துவமனையில் எங்களை இறக்கிவிட்ட வேகத்தில் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். எதுவும் புரியாமல் உள்ளே போய் மருத்துவரை சந்தித்தபோது குழந்தை இறந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
தடுப்பூசி போடப்பட்டதால் தான் குழந்தை இறந்ததாகவும், எனவே இது குறித்து உரிய விசாரனை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், குழந்தையின் இறப்பிற்கு உண்மையான காரணம் தெரியும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறினார்.
நேற்று 4 மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் உறவினர்களோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் பொறுப்பு வருவாய் கோட்டாட்சியர் பழனிவேல் மற்றும் வட்டாட்சியர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இறந்த குழந்தையின் உடலை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்குறு ஆய்வுக்காக பிணவறைக்கு அனுப்பப்பட்டது.
இன்று இரண்டாவது நாளாக இறந்த குழந்தையின் உடலை வாங்காமல் உறவினர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இறந்த குழந்தைக்கு இழப்பீடு வழங்க வேண்டும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போதுதான் உடலை வாங்கி செல்வோம் இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.