"3ஆம் ஆண்டிலும் மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" முதலமைச்சர் வேண்டுகோள் ...!

"3ஆம் ஆண்டிலும் மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" முதலமைச்சர் வேண்டுகோள் ...!
Published on
Updated on
2 min read

இரண்டு ஆண்டு கொடுத்த ஒத்துழைப்பை போல மூன்றாம் ஆண்டிலும் மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மே மாதம் ஏழாம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றார் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நேற்றுடன் இரண்டு ஆண்டு நிறைவு பெற்று இன்று மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதையொட்டி, மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, தங்கம் தென்னரசு, சாமிநாதன், ரகுபதி, சேகர்பாபு சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் இருந்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், விமர்சனம் பற்றி எதுவும் நான் கவலைப்படவில்லை நல்லதை எடுத்துக் கொள்வேன், கெட்டதை புறம் தள்ளுவேன் எனக் கூறினார். மேலும் "ஆட்சி பொறுப்பேற்று இதே இடத்தில் நான் கூறினேன். இந்த ஆட்சி ஓட்டு போட்டவர்களுக்கு மட்டும் இல்லை ஓட்டு போடாதவர்களுக்குமான ஆட்சி. இந்த ஆட்சிக்கு ஓட்டு போட்டவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். ஓட்டு போடாதவர்கள் இப்படிப்பட்ட ஆட்சிக்கு ஓட்டு போடவில்லை என்று வருந்த வேண்டும் அந்த அடிப்படையில் ஆட்சி இருக்கும் என்று அன்றே சொன்னேன்" என சுட்டிக்காட்டிய அவர் அப்படிதான் இந்த ஆட்சி இருக்கிறது எனக் கூறினார். 

தொடர்ந்து, இரண்டு ஆண்டு எப்படி ஒத்துழைப்பு வழங்கினீர்களோ மூன்றாம் ஆண்டிலும் அதேபோன்று ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மக்களுக்கு கோரிக்கை வைத்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com