தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: முதலமைச்சர் இரங்கல்!

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: முதலமைச்சர் இரங்கல்!
Published on
Updated on
2 min read

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து தனியார் பேருந்து ஒன்று, பயணிகளை ஏற்றிக் கொண்டு, கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. மேல்பட்டாம் பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் முன் பக்க டயர் வெடித்துள்ளது. இதில், பேருந்தானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. 

அதே நேரம் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மீது அதி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பேருந்துகளின் முன் பக்கமும் நொறுங்கி சேதமடைந்தது.

பேருந்தில் பயணித்த பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, அவ்வழியாக சென்றவர்கள் ஓடி வந்து நொருங்கிக் கிடந்த பேருந்துகளில் இருந்து,  பயணிகளை மீட்டனர். இதில் 70க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .

இந்த கோர விபத்தில்,  பேருந்து ஓட்டுனர் அங்காள மணி மற்றும் நடத்துனர் முருகன், பயணிகள் சீனிவாசன் மற்றும் தனபால் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், புதுச்சேரியை சேர்ந்த மல்லிகா என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

விபத்து குறித்து அறிந்த காயமடைந்தவர்களின் உறவினர்கள் கடலூர் மருத்துவமனை முன்பாக திரண்டனர். அத்துடன் காயமடைந்தவர்களுக்கு ரத்ததான வழங்குவதற்காக இளைஞர்களும் தன்னார்வத்துடன் வந்து குருதி தானம் செய்தனர்.

விபத்துக்குள்ளான இரு பேருந்துகளையும் அகற்றும் பணியில், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு பேருந்தை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தின் விளைவாக அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இந்த கோர விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கணேசன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் முதலமைச்சர் அறிவித்த நிவாரண தொகைக்கான காசோலையையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், காயம் அடைந்தவர்கள் அனைவருக்கும் உயர் ரக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com