சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய கூடாது என்று தீட்சிதர்கள் வைத்த அறிவிப்பு பலகை காவல்துறை பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்த காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய தீட்சிதர்கள் தடை விதித்திருந்தனர். பின்னர் ஊரடங்கு முடிவிற்கு வந்த பின்பும் இந்த தடையை தீட்சிதர்கள் தொடர்ந்து வந்தனர். இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.
இதனை அடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 17ஆம்தேதி சிதம்பரம் கோயிலில் நடைபெற்ற ஆனி திருமஞ்சனம் விழாவை ஒட்டி, சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடந்து வருவதால் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பாதுகாப்பு காரணங்களுக்காக கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோயில் தீட்சிதர்கள் பதாகை வைத்தது கடும் சர்ச்சையை கிளப்பியது.
இது குறித்து தீட்சிதர் தட்சன் என்பவரே இந்துசமய அறநிலையத்துறைக்கு புகார் அளித்த நிலையில், கனகசபை மீது தரிசனம் செய்ய அனுமதி மறுக்கும் அறிவிப்பு பதாகையை அரசுடன் ஆலோசிக்காமல் வைத்துள்ளதால் அதனை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அறநிலையத்துறை செயல் அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அறநிலையத்துறை செயல் அலுவலர், அரசின் உத்தரவை மீறி வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பதாகை குறித்தும், தம்மை பணி செய்ய விடாமல் தடுத்த தீட்சிதர்கள் மீது நடவடிக்கைக்க கோரியும் புகார் அளித்தார். இந்த நிலையில் இன்றைய தினம், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் கோயிலுக்குள் வந்து சர்ச்சைக்குரிய பதாகையை அகற்றினர்.