”காவல்துறை சார்பில் தயார் நிலையில் உள்ள மீட்பு படையினர்...” - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

”காவல்துறை சார்பில் தயார் நிலையில் உள்ள மீட்பு படையினர்...” - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
Published on
Updated on
1 min read

மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் கரையை கடப்பதையொட்டி சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தயார் நிலையில் உள்ள மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கான காவல் குழுவினர் மற்றும் உபகரணங்களை  சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆய்வு செய்து காவலர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக பிரத்யேகமாக மொத்தம் 12 குழுவினர் தயாராக இருப்பதாகவும், அந்த குழுவினருக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், சென்னையில் 16 ஆயிரம் போலீசார் மற்றும் 1500 ஊர்க்காவல் படையினர் தேவையான மீட்பு பணியில் ஈடுபட தயாராக உள்ளதாகவும், அதேபோல சாலையில் மரம் விழுதல் உள்ளிட்டவற்றை அகற்றுவதற்காக இந்த குழுவினருக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாமல் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட நான்கு படகு குழுவினரும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்த அவர், இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை மழை நீர் தேங்கும் இடங்கள், சாலையில் மரம் விழும் இடங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், 12 மீட்புக் குழுவில், ஒரு குழுவுக்கு 10 பேர் என்ற அடிப்படையில் மீட்பு பணியிலும், படகு குழுவில் ஐந்து பேர் என மொத்தம் 180 காவலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை காவல் துறையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலமாக தகவல்கள் பகிரப்பட்டு வருவதாகவும் கூறியதுடன், காவல் துறையில் பொதுமக்கள் 112 , 1913 ஆகிய இரு அவசர எண்களை தொடர்பு கொண்டும், சமூக வலைதளம் மூலமாகவும் தங்களுக்கான உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் புயல் நள்ளிரவில் கரையை கடக்கக் கூடும் என்பதால் பொதுமக்கள் அவசர தேவை இன்றி வெளியில் வர வேண்டாம் எனவும், அதோடு கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், ஈ.சி.ஆர் போன்ற கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். மேலும், பழைய கட்டிடங்கள் கணக்கீடு செய்யப்பட்டு அங்கிருப்பவர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும், அனைத்து உதவிகளும் செய்ய தயாராக சென்னை காவல்துறை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com