சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி முதல் சஞ்ஜிப் பானர்ஜி பதவி வகித்து வந்த நிலையில், அவரை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய, உச்சநீதிமன்ற கொலீஜியம் முடிவு செய்து, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ய வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தனர்.
பொறுப்பேற்று 10 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் தலைமை நீதிபதியை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? என பலரும் கேள்வி எழுப்பினர். இந்த சூழ்நிலையில், தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை இடமாற்றம் செய்யும் கொலிஜியத்தின் பரிந்துரைக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, மேகாலயத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.