விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார்(27). இவர் சென்னை அயனாவரம் வசந்தம் கார்டன் முதல் தெருவில் நண்பர்களுடன் தங்கி சென்னை ஆயுதப்படையில் உள்ள குதிரைப்படையில் காவலராக பணியாற்றி வந்தார்.
அருண்குமார் பல ஆண்டுகளாக பிரியா என்பவரை காதலித்து, கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு அவரை திருமணம் செய்து கொண்டார். பிரியா திருநெல்வேலி மாவட்டத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அயனாவரத்தில் தங்கி வந்த காவலர் அருண் குமார், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், இன்று காலை பணியிலிருந்து சீக்கிரமாக வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடன் அறையில் தங்கி வந்த புஷ்பராஜ் என்பவர் அயனாவரம் காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காவலர் அருண்குமாரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவரது அறையில் இருந்து அருண் குமார் எழுதி வைத்த கடிதத்தை போலீசார் மீட்டனர். அந்த கடிதத்தில், நானாக தேடி கொண்ட வாழ்க்கை நல்ல முறையில் செல்லவில்லை எனவும் அம்மா,அப்பா என்னை மன்னித்துவிடுங்கள் எனவும் தொடர்ச்சியாக தனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில், தனது மனைவி தன்னை ஆபாசமாக பேசி வந்ததால் தற்கொலை செய்து கொள்கிறேன் என உருக்கமாக கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அருண்குமாரின் பெற்றோர் பார்வையற்ற மற்றும் செவி திறன் குறைபாடுடையவர் என்பதும் கணவர் மற்றும் மனைவி வேறு இடத்தில் பணியாற்றி வந்ததால் இருவருக்குமிடையே பிரச்சனை நிலவி வந்துள்ளது. குறிப்பாக அருண்குமாரின் திருமணம் நடைபெற்ற போது 10 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்ததும், அதன் பிறகு விடுமுறை கிடைக்காமல் இருந்ததால் மனைவியை சந்திக்க முடியாது நிலை ஏற்பட்டதால் மேலும் பிரச்சனை பூதாகரமாக வெடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அருண்குமாரின் தாய் மற்றும் தந்தையை கவனிக்க கூடாது என மனைவி பிரியா அருண்குமாருடன் சண்டையிட்டு ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அருண் குமார் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து லீவு கொடுக்காததால் மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தொலைபேசியில் மட்டுமே குடும்பம் நடத்துவதாக தற்கொலை செய்து கொண்ட காவலர் பேசும் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.