ஆன்லைன் தேர்வுகள் நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக, தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, கடந்த மாதம் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மதுரையில் 9 மாணவர்கள் மீதும், கள்ளக்குறிச்சி, சென்னை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வழக்கு என தமிழகத்தில் மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், வழக்குகளால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கைவிட வேண்டும் என, தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன் பேரில் மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளிலும் போலீசாரின் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக, டி.ஜி.பி. அலுவலகம் தெரிவித்துள்ளது.