கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல கால்வாய்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதேப்போல் முளகுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வார்டு கூட்டமாவு கிராமம் வழியாக திருவிதாங்கோடு கிளை கால்வாய் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த கால்வாயின் கடைமடை பகுதிகள் மற்றும் கிளை கால்வாய் பகுதிகளில் முறையாக குடிமராமத்து பணிகள் நடைபெறவில்லை என கூறப்படுகிறது.
இதனால் கால்வாயில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்ட நிலையில் கால்வாய் தண்ணீர் முறையாக செல்லாமல் முளகுமூடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட கூட்டமாவு கிராம சாலையில் மற்றொரு கால்வாய் போல் கடந்த ஒருவாரமாக வடிந்தோடி வருகிறது. இதனால் அப்பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளான நிலையில் அந்த கால்வாய் அடைப்புகளை சரி செய்து சாலையில் வடியும் தண்ணீரை கட்டுபடுத்த கோரி பொதுப்பணித்துறை மற்றும் முளகுமூடு பேரூராட்சி செயல் அலுவலருக்கும் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் இன்று மாலை கையில் மக் உடன் அந்த பகுதிக்கு வந்த முளகுமூடு பேரூராட்சி 15- வார்டு முன்னாள் கவுன்சிலர் தங்கப்பன் என்பவர் அதிரடியாக சாலையில் ஓடும் புழுதி கலந்த தண்ணீரில் குளிக்க தொடங்கியதோடு அந்த சாலை தண்ணீரில் உருண்டு புரண்டு நீச்சலடித்ததோடு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் யார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கேள்வியை முன் வைத்து மீண்டும் குளியலை தொடர்ந்ததோடு சில இளைஞர்கள் உதவியுடன் குளியலை வீடியோவாகவும் எடுக்க இ அந்த சாலை வழியாக வந்த வாகன ஓட்டிகள் பலர் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தும் சென்றனர்.
இந்த வீடியோவை முன்னாள் கவுண்சிலர் தங்கப்பன் அதிகாரிகளின் கவனத்திற்கு அனுப்பி வைத்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. அதே வேளையில் அப்பகுதியில் ஏராளமான இளைஞர்கள் அரசியல் பிரமுகர்கள் இருந்தும் சாலையில் வடியும் கால்வாய் நீரை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளுக்கோ போராட்டத்திற்கோ முன் வராத நிலையில் முன்னாள் கவுன்சிலர் தனி ஒருவனாய் சாலையில் குளிக்கும் போராட்டம் நடத்தி அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.