கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்குமா என்பது தொடர்பான அறிவிப்புகள் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக, மே31-ந்தேதியில் இருந்து ஜூன் 7-ந்தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதில் நல்ல பலன் கிடைத்ததால் தொடர்ந்து 7-ந்தேதியில் இருந்து 14-ந்தேதி வரையிலும், பின்னர் 14-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரையிலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. நாளொன்றுக்கு தொற்றின் எண்ணிக்கை 36 ஆயிரம் என்ற நிலையில் இருந்து, அடுத்தடுத்து 4 முறை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் மூலம் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து நாளொன்றுக்கு 8 ஆயிரம் என்ற விகிதத்தை எட்டியுள்ளது.
அடுத்ததாக 5-வது முறையாக நாளை முதல் ஊரடங்கு உத்தரவை நீடிப்பதற்காகவும், அதில் என்னென்ன தளர்வுகளை மேற்கொள்ளலாம்? என்றும் ஆலோசிப்பதற்காக மருத்துவ நிபுணர் குழு மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் கொரோனா 3-வது அலையின் தாக்கம் பற்றியும் அதை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் தொற்று குறைந்து வரும் மாவட்டங்களை தேர்வு செய்து அங்கும் பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அனுமதிக்கலாம் என்று கருத்து கூறப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுத்துள்ள முடிவின் அடிப்படையில், தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு உத்தரவு பற்றிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து தொடங்குவது குறித்த அறிவிப்பு இதில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.