சென்னை கேகே நகர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், கைதான ஆசிரியர் ராஜகோபாலனுக்கு நெருங்கிய நண்பர்கள் யார்-யார்? பட்டியலை எடுத்து விசாரிக்க உள்ளது காவல்துறை.
சென்னை கே.கே நகர் பி.எஸ்.பி.பி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் அப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது மேலும் பல மாணவிகள் காவல் துறையினருக்கு புகார்கள் அளித்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கு தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
மேலும், மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் புகார்களை பள்ளி நிர்வாகம் புறக்கணித்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து பள்ளியின் முதல்வரிடமும், தாளாளரிடமும் அசோக் நகர் காவல் நிலையத்தில் வைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி, தி.நகர் துணை ஆணையர் ஹரிகிரண் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அதேபோல நேற்று பள்ளியின் முதல்வர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு அவரிடம் காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 6 மணி நேரமாக நடைபெற்ற விசாரணையில் பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் ஆகியோரின் பதில்கள் வாக்குமூலமாகவும் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையில் பள்ளி நிர்வாகத்திற்கு எந்தவிதமான புகார்களும் வரவில்லை என்ற பதிலை ஒரே மாதிரி அவர்கள் இருவரும் தெரிவிக்கும் நிலையில், ஆசிரியர் ராஜகோபாலனின் செல்போனை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்விற்கு உட்படுத்தி அதிலிருக்கும் தரவுகளை கைப்பற்றும் முயற்சியில் காவல்துறை தீவிரம் காட்டி உள்ளனர்.
ராஜகோபாலனுக்கு பள்ளியில் நண்பர்களாக இருக்கும் ஆசிரியர்கள் யார்- யார் என்பதை கண்டறிந்து அவர்களிடமும், இணையவழி வகுப்புகளை கண்காணிக்கும் பொறுப்பாளரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.