2024 இல் பிரதமர் வேட்பாளராக தமிழரை அறிவித்தால் பாஜகவை ஆதரிக்க தயார் என சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்.
குமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் இன்று தரிசனம் செய்ய வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசும்போது....
பாஜக கையில் தான் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை உள்ளது என்றும், அவர்கள் சொல்வதை தான் அந்த துறை கேட்கும் எனவும், தலைமைச் செயலகத்தில் ரெய்டு என்பது ஆளுமையை பொறுத்தது என்றும் கூறினார். மேலும், எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர் ஆகியோர் உயிரோடு இருந்தபோது இது மாதிரியான சோதனை எல்லாம் நடைபெறவில்லை எனவும், அவர்கள் இருந்தபோது ஆளுநர்கள் ஆட்டம் போடவில்லை என்றும் விமர்சித்தார்.
மேலும், சோதனையை வைத்து எல்லாம் திமுகவை தங்களது கூட்டணிக்குள் பாஜக இழுக்காது எனவும், அது ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது எனவும், தற்போது திமுகவை பழிவாங்க வேண்டும் என்று பாஜக நினைப்பதாகவும் 'தமிழர் பிரதமராக வேண்டும்' என்று அமித்ஷா கூறுவது வாக்கை பறிக்கும் நுட்பம் என்றும் விமர்சித்துள்ளார். மேலும், அமித்ஷா சொல்வது போல் தமிழர் பிரதமராவது எப்போது ? ; 2024 இல் பிரதமர் வேட்பாளராக தமிழரை அறிவித்தால் நாங்கள் ஆதரிக்கிறோம். அமித்ஷாவிற்கு அந்த துணிவு இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதோடு, ஒருவேளை தமிழருக்கு பிரதமராக வாய்ப்பு இருக்கிறது என்றால் 2024 தமிழ் வேட்பாளர் அண்ணாமலையா ? தமிழிசையா ? பொன் ராதாகிருஷ்ணனா ? அந்த தமிழர் யார் ? எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், சும்மா வாயிலேயே வடை சுட்டு, பாயாசம் காய்ச்சி இன்னும் எத்தனை காலம் எங்களை ஏமாற்றுவார்கள் என்றும் காட்டம் தெரிவித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி எனக்கு தம்பி போன்றவர் எனவும், தனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கமானவர் என்றும், அவருக்கு உடல்நிலை சரியாகி விரைவில் அவர் குணமாகி வர வாழ்த்துவதாக தெரிவித்தார்.
இதையும் படிக்க | செந்தில் பாலாஜி அலுவலகத்திற்கு அமலாக்கதுறை நோட்டீஸ்!