அரசு வங்கிகள் திட்டமிட்டே முடக்கப்படுகின்றன என வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கம் அருகில் வங்கிகளை பொதுத்துறையாக பாதுகாக்க வலியுறுத்தி வங்கி ஊழியர்களின் 4000 கி.மீ. வேன் பிரச்சார பயணம் தொடக்க நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு இப்பயணத்தை தொடங்கி வைத்த இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின்
பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் உரையாற்றுகையில், "இப்பிரச்சார பயணத்தின் முக்கிய நோக்கம், 1969 க்கு முந்தைய காலங்களில் வங்கிகள் யாவும் தனியார் வசம் தான் இருந்தன. அவற்றில் பெரும்பாலான வங்கிகள் திவாலானதும் அன்றைய தினம் வைப்பு நிதி வைத்திருந்தவர்களின் பணம் காணாமல் போவதும் மறக்க முடியாத வரலாறு. மீண்டும் அது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க பொதுத்துறை வங்கிகளை காக்க வேண்டும். ஏற்கனவே 2008 இல் உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது இந்தியாவில் அதனுடைய பாதிப்புகள் தடுக்கப்பட்டதற்கு இங்கு வங்கி துறை வர்த்தகங்கள் பெரும் அளவில் பொதுத்துறை வங்கிகள் மூலம் இருந்ததே முக்கிய காரணமாகும்.
வங்கிகள் தனியார் மயத்தை எதிர்த்து நாடெங்கிலும் உள்ள 10 லட்சம் வங்கி ஊழியர்கள் 2021 மார்ச் 15, 16 மற்றும் டிசம்பர் 16, 17 ஆகிய நான்கு நாட்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதனால் இந்த ஆபத்து தற்காலிகமாக தள்ளிப் போடப்பட்டது. தற்போது அந்த ஆபத்து ஒன்றிய நிதி அமைச்சரின் சமீப அறிவிப்பால் மீண்டும் தலை தூக்கி உள்ளது.
அரசு வங்கிகள் திட்டமிட்டே முடக்கப்படுகின்றன. ஐந்து லட்சம் காலி இடங்கள் நிரப்பப்படாமல் விடப்பட்டுள்ளன. கடுமையான ஊழியர் பற்றாக்குறையால் வாடிக்கையாளர்கள் சேவை மிகவும் பாதிப்படைகிறது. கடைநிலை ஊழியர்கள், ஆயுதமேந்திய காவலர்கள், தற்காலிக ஊழியர்களாகவும், இலட்சக்கணக்கான வணிக முகவர்கள் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்டு அவர்கள் கடுமையான உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
எஸ் எம் எஸ் கட்டணம், ஏ டி எம் கட்டணம், பணம் செலுத்தும் கட்டணம், பாஸ்புக் கட்டணம், குறைந்தபட்ச இருப்பு கட்டணம் என்று பலவகையில் வாடிக்கையாளர்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. மறுபுறம் பெரு முதலாளிகளிடமிருந்து கடன் ரத்து செய்யப்படுகிறது. வேண்டுமென்றே கடனை திருப்பி கட்டாதவர்களிடமும் மோசடி பேர்வழிகளிடமும் சமரச ஒப்பந்தம் போட்டு அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ரிசர்வ் வங்கியை முனைப்பு காட்டுகிறது.
ஆகவே பொதுத்துறை, கூட்டுறவு, கிராம வங்கிகளை பாதுகாக்கவும், மக்களின் சேமிப்பிற்கு பாதுகாப்பு வழங்கவும், தேவையான ஊழியர்களை நியமனம் செய்யவும், வங்கிப் பணிகளை வெளியாட்களுக்கு விடுவதை கைவிடவும், தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவும், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தவும், அவர்களிடமிருந்து அநியாய அபராத கட்டண வசூலை கைவிடவும் வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 4000 கிலோமீட்டர் வேன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு மக்களை சந்திக்க உள்ளளோம்" என தெரிவித்தார்.