உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்தவருக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனையை 10 மாதங்களாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மேலும் படிக்க | இளம்பெண் பாலியல் வழக்கு: 4 பேருக்கு சாகும்வரை சிறை தண்டனை உறுதி!
போலி ஆவணங்கள்
வங்கதேசத்தை சேர்ந்த முகமது மொமின்வார் உசேன் உள்ளிட்ட சிலர் மீது ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்ததாகவும், உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்ததாகவும் திருப்பூர் ஊரக காவல்துறை கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முகமது மொமின்வார் உசேன் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்தற்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. மற்ற குற்றவாளிகளுக்கு 10 மாதம் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கபட்டது.
மனுதரார் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை
மூன்றாண்டு சிறை தண்டனை தீர்ப்பை ரத்து செய்ய கோரி மொமின்வார் உசேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முகமது சைபுல்லா, மனுதரார் வாழ்வாதாரத்திற்கு புலம் பெயர் தொழிலாளராக மட்டுமே இந்திய வந்துள்ளார் என்றும் இவரை அகதிகள் அல்லது வியாபார நோக்கோடு ஆட்கடத்தலில் பாதிக்கப்பட்டவராக மட்டுமே கருத வேண்டும். மேலும் இந்தியாவில் மனுதரார் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்று வாதிட்டார்.
ஆதாரம் இல்லை
மேலும் ஆதார் உள்ளிட்ட போலி ஆவணங்கள் தயாரித்தற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் மற்ற குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டதை போன்று குறைந்தபட்ச தண்டனையே வழங்க வேண்டும் என வாதிட்டார். இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டுகள் மனுதராருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கபடவில்லை. இருப்பினும் விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் தங்கியிருந்த குற்றசாட்டு நிரூபிக்கபட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிக்கையின் அடிப்படையில் அவரை வியாபார நோக்கோடு ஆட்கடத்தலில் பாதிக்கபட்டவராக தான் கருத வேண்டும் என கூறி திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறை தண்டனை 10 மாதமாக குறைப்பதாகவும் உத்தரவிட்டுள்ளார்.