''கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை'' ஆவடி காவல் ஆணையர் எச்சரிக்கை!

''கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை'' ஆவடி காவல் ஆணையர் எச்சரிக்கை!
Published on
Updated on
1 min read

சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில், நடைபெற்ற பொதுமக்கள் மனு மீது குறை தீர்க்கும் முகாமில், ஆவடி காவல் ஆணையர் கலந்துகொண்டு, அனுமதித்துள்ள நேரங்களை தவிர கள்ள சந்தையில் மது விற்பனை நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட 25 காவல் நிலையங்களில் பொதுமக்களிடமிருந்து நிலம், கொடுக்கல் வாங்கல், குடும்ப பிரச்னை, காவல் நிலையங்களில் தீர்வு காணாத பிரச்சனை போன்ற பல்வேறு புகார் குறித்த மனுக்கள்  நிலுவையில் உள்ளன. இதில் குறிப்பாக அந்தந்த காவல் நிலையங்களில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்காத நிலையில், இது சம்பந்தமாக அதிக அளவில் புகார்கள் பெறப்பட்டுள்ளது.

இந்த புகார்களுக்கு ஒரே இடத்தில் உடனடியாக தீர்வு காணும் வகையில், ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், பொதுமக்கள் மனு மீது குறை தீர்க்கும் முகாம் 2 வது முறையாக திருமுல்லைவாயலில் அமைந்துள்ள தமிழ்நாடு காவலர் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் ஆவடி காவல் ஆணையரை நேரில் சந்தித்து பொதுமக்கள் புகார் மனுக்களை அளித்தனர்.அப்போது புகார் மனுவைப் பெற்று கொண்ட ஆணையர் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு விரைவாக நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். தீர்வு காணப்படாத 128 புகார் மனுக்களில் 97 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு முடித்துவைக்கப்பட்டதுடன், பொதுமக்களிடமிருந்து 73 மனுக்களை ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் பெற்று அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் இது குறித்து பேசிய, ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு அனுமதித்துள்ள நேரங்களை தவிர கள்ள சந்தையில் மது விற்பனை நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com