28 மாதங்களில் சென்னையில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில், வாகன நெரிசலில் சிக்கி மக்கள் அவதி பெறுவது ஒரு வாடிக்கையான விஷயமாக தான் இருந்து வருகிறது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால், குறைந்தது ஒரு மணி நேரத்திரலிருந்து பல மணி நேரங்கள் ஆகும்.
இப்படிப்பட்ட சூழலில் இருந்து மக்கள் சற்றே அசுவாசப் படுத்திக்கொள்வதற்காக மெட்ரோ திட்டம் கொண்டு வரப்பட்டது. முதல் கட்டமாக கொண்டு வரப்பட்ட மெட்ரோ திட்டம் பரங்கிமலை முதல் கோயம்பேடு வரையிலும், விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலும் செயல்படுத்தப்பட்டது. இதனால் அலுவலகம் செல்லும் மக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் என பலரும் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த மெட்ரோ ரயில் சேவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருவதால், 2ம் கட்ட மெட்ரோ சேவை, மாதவரம் முதல் சிறுசேரி, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர், பூந்தமல்லி முதல் விவேகானந்தர் இல்லம் ஆகிய 3 வழித் தடங்களில் அமைந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2ல், ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்களை உருவாக்க அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ269 கோடியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 26 மெட்ரோ ரயில்கள் வழங்க ஒப்பந்தத்தில் கையெழுத்தான நிலையில், தற்போது கூடுதலாக 10 மெட்ரோ ரயில்கள் என மொத்தம் 36 மெட்ரோ ரயில்களை வழங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.