தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் பதிவு செய்யாமல் இயங்கும் இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிஎம் கட்சி உறுப்பினர்கள் நாகை மாலி, சின்னத்துரை ஆகியோர் சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
அப்போது பேசிய எம்எல்ஏ நாகை மாலி, இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், அனுமதியின்றி செயல்படும் பண்ணைகள் குறித்து விசாரிக்க குழு அமைக்க வேண்டுமெனவும் கோரினார்.
இதற்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விதிகளை மீறும் பண்ணைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். விவசாயத்துக்கும் நீர்வளத்துக்கும் பாதிப்பு ஏற்படாத இடங்களில் இறால் பண்ணைகள் அமைக்க வலியுறுத்தப்படும் எனவும் கூறினார்.