16 வயது மாணவியின் கோரிக்கை என்ன தெரியுமா..? ரத்து செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்...

16 வயது மாணவியை நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 வயது மாணவியின் கோரிக்கை என்ன தெரியுமா..? ரத்து செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்...
Published on
Updated on
1 min read

மருத்துவ படிப்புக்காக நடத்தப்படும் நீட் தேர்வில் பங்கேற்க 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால், 12-ம் வகுப்பு முடித்துள்ள கும்பகோணத்தை சேர்ந்த 16 வயது மாணவி ஸ்ரீஹரிணி, தம்மை நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, மாணவி புத்திசாலித்தனமாக உள்ளதால் அவரை நீட் தேர்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வை எழுத 17 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என தேசிய மருத்துவ கமிஷன் விதி உள்ளதாகவும், இந்த விதியில் நீதிமன்றம் தலையிடக் கூடாது எனவும் கூறியுள்ளது.

மேலும், மாணவி புத்திசாலித்தனமாக இருந்தாலும், அதற்காக விதிகளை மீறி தேர்வு எழுத அனுமதிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

மாணவி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுந்தரேசன், 17 வயது ஆகாவிட்டாலும், கல்வியில் மாணவி புத்திசாலியாக உள்ளார் என்றும், 17 வயது நிரம்பாத அவரை சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுத அனுமதித்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வயதின் காரணமாக நீட் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்றால், அவருக்கு ஓராண்டு வீணாகி போய் விடும் எனவும் வாதிட்டார்.

அப்போது பேசிய நீதிபதிகள், அரசியல் ஞானம் அதிகம் உள்ளதாக கூறி 18 வயது பூர்த்தி ஆகாத ஒருவரை பொது தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினர்.

தற்போது சம்பந்தப்பட்ட மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்தாலும், அதன் தாக்கம் அவரை மன ரீதியாகப் பாதிக்கும் என தெரிவித்த நீதிபதிகள்,

நீட் தேர்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து, 16 வயது மாணவி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஆணையிட்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com