பெண்கள் பணி செய்யும் போது விளம்பரத்திற்காக பணி செய்யாமல் அமைதியாக உழைத்தால் முன்னேறலாம் என ஷர்மிளா விவகாரம் குறித்து ஆசியாவின் முதல் அரசு போக்குவரத்து கழக பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி தெரிவித்தார்.
கோவையை சேர்ந்த ஷர்மிளா தனியார் பேருந்து ஓட்டுனர் ஆக பணிபுரிந்து வந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி அந்த பேருந்தில் பயணம் செய்ததை தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனையால் அவர் பணியை விட்டு வெளியேறினார். இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆசியாவின் முதல் பெண் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் வசந்தகுமாரி கூறியதாவது" பெண்கள் பணிபுரியும் இடங்களில் அமைதியாக பணிபுரிந்தால் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறலாம். விளம்பரத்திற்காக பணிபுரிவது என்பது நம்மை முன்னேற்றாது. நாம் பணிபுரியும் தரத்தை வைத்து மற்றவர்கள் நமக்கு விளம்பரம் செய்வார்கள்.
கோவை பெண் ஓட்டுனர் ஷர்மிளா விவகாரத்தை பார்க்கும்போது, அவர் சுய விளம்பரத்திற்காக தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்தி உள்ளார். அதேநேரம் ஒரு பெண் ஓட்டுனர் என்ற விஷயத்தில் திமுக எம்பி கனிமொழி செய்தது பாராட்டக் கூடியது. அதனால் கனிமொழிக்கு ஏற்பட்ட நெருக்கடி வருத்தத்திற்குரியது. அவர் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவரது செயலை மனமார பாராட்டுகிறேன்" என்று கூறினார்.