புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை பிடித்த அரவிந்த்ராஜ் என்ற வீரர் ஆறாவது சுற்றின் போது காளை முட்டியதில் உயிரிழந்தார்.
மாடுபிடி வீரரை தூக்கி எறிந்த காளை :
உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி மஞ்சள் மலை ஆற்று மைதான திடலில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் 9 காளைகளை பிடித்து 3ஆம் இடத்திலிருந்த மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் 10 வது காளையை பிடிக்கும் நோக்கில் ஆயத்தமானார். அப்போது எதிர்பாராத விதமாக சீறிப்பாய்ந்து வந்த காளை அரவிந்த் ராஜின் வயிற்றில் குத்தி தூக்கி வீசியது. இதில் கீழே சரிந்து விழுந்த மாடுபிடி வீரர் அரவிந்தராஜ் மயக்கமடைந்தார்.
உயிரிழந்த அரவிந்த் ராஜ் :
இதையடுத்து அரவிந்த் ராஜை உடனடியாக மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அரவிந்த ராஜ் உயிரிழந்தார். இந்த செய்தி அரவிந்த் ராஜ் உறவினர்களை சோகத்தில் ஆழத்தியுள்ளது.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை :
இதேபோல் 16 காளைகளை அடக்கி முதலிடத்தில் இருந்த மணி என்பவரின் முழங்கையில் காளை முட்டியதால் அவர் காயமடைந்தார். இதனால் தற்போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பார்வையாளர் உயிரிழப்பு:
இதனிடையே திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் ஒருவர் காளை முட்டியதில் உயிரிழந்தார். மூன்றாவது சுற்று முடிவடைந்து நான்காவது சுற்று நடைபெற்ற போது, அரவிந்த் என்ற பார்வையாளாரை காளை முட்டிய நிலையில், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் சிகிச்சை பலனின்றி அரவிந்த் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.