தமிழ்நாடு அரசியல் சூழல் தொடர்பாக பாஜக மேலிடத் தலைவர்களை சந்தித்து விளக்கம் அளிப்பதற்காக டெல்லி செல்வதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக கூட்டணி முறிந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த அண்ணாமலை, என் மண் என் மக்கள் நடைபயணத்தின் 3வது பயணம் தொடர்பாக பாஜக மேலிடத் தலைவர்களை சந்திக்க டெல்லி செல்வதாக குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் அரசியல் சூழல் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தச் உள்ளதாகவும் அவர் கூறினார்.
நடைபயணத்தில் திமுகவுக்கு எதிராக பல்வேறு புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பதை பாஜக தலைமை உரிய நேரத்தில் அறிவிக்கும் எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். அரசியலில் யாரையும் அணுசரித்து செல்லும் அவசியம் தனக்கு இல்லை எனவும் அண்ணாமலை ஆவேசமாக கூறினார்.
மேலும் அடிப்படையில் தாம் ஒரு விவசாயி என்றும் பிறகு தான் அரசியல்வாதி என அண்ணாமலை கூறினார். முன்னதாக பாஜக தலைவர் பதவியில் இருந்து தங்களை நீக்க வாய்ப்புள்ளதா? என கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுடன் அண்ணாமலை வாக்குவாதம் செய்ததால் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
இதையும் படிக்க: குன்னூர் விபத்து பிரதமர் குடியரசுத் தலைவர் இரங்கல்!