"பிரதமர் மோடி ஊழலற்ற ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்" அண்ணாமலை பேச்சு!!

Published on
Updated on
1 min read

முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் 99 சதவிகிதம் நிறைவேற்றி விட்டதாக ஏமாற்றி வருகிறார் என மாநில பாஜக தலைவா் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பிரச்சார யாத்திரை மேற்கொண்டார். வத்தலகுண்டு பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தியாகி சுப்பிரமணிய சிவா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பொதுமக்கள் இடையே உரையாற்றிய அவர், "தமிழகத்தில் குடிகார கலாச்சாரம் பெருகிவிட்டது. பள்ளி மாணவிகள் முதல் பலரும் மதுவிற்கு அடிமையாகி, பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மது ஆலைகளை திமுகவினரே நடத்துவதால் தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை. தமிழக முதல்வர் கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் 99% நிறைவேற்றி விட்டதாக பொய் சொல்லி வருகிறார். உதாரணமாக நிலக்கோட்டை தொகுதியில் அவர்கள் சொன்ன தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பேசிய அவர், இதே போல் தமிழக அமைச்சர்களில் 11 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது ஆனால் பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையான ஊழலற்ற ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் எனவும் தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளில் 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், வலிமையான பாரதத்தை உருவாக்கிட வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com