ஆளுநர் தான் அண்ணாமலை, அண்ணாமலை தான் ஆளுநர் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.
தமிழக அரசின் சட்ட கல்லூரிகளில் முதுநிலை சட்டப்படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற முதல் 10 மாணவ, மாணவியர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிய பின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் ரகுபதி, நீண்டகால சிறைவாசிகள் 49 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு அனுப்பியுள்ள கோப்புகள் அனைத்தும் தற்போது வரையிலும் நிலுவையில் உள்ளன. நீண்ட கால சிறைவாசிகள் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மாட்டார் என அண்ணாமலை கூறியுள்ளார். ஆளுநரும், அண்ணாமலையும் ஒன்றுதான் என அண்ணாமலையே ஒத்துக்கொண்டுள்ளார். ஆளுநர் தான் அண்ணாமலை, அண்ணாமலை தான் ஆளுநர் எனக் கூறினார்.
ஆன்லைன் ரம்மி தடைக்காக அமைக்கப்பட்டிருக்கக்கூடிய குழு, அதன் பணிகளை செய்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வருகின்றது. ஆன்லைன் ரம்மிக்கும், ரம்மிக்கும் இரண்டு வேறுபாடுகள் உள்ளன. ரம்மி என்பது இரண்டு பேர் நேருக்கு நேர் விளையாடுகின்ற விளையாட்டு. மூன்றாவது ஆளுக்கு இடம் கிடையாது. ஆனால், ஆன்லைன் ரம்மி என்பது ஒரு ப்ரோக்ராம் செட் செய்யும் விளையாட்டு எனவே அதில் மூன்றாவது நபர் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது எனக் கூறினார்.
இந்த செயலிகளில், ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றுவதை போல பணத்தை பிடுங்கி விடுவார்கள். மத்திய அரசிற்கு அதை நாங்கள் பலமுறை எடுத்துச் சொல்லியும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்பது வினோதமாகும் ஆச்சரியமாகும் உள்ளது. ஆன்லைன் ரம்மி என்பது நேரடியாக விளையாடும் திறமை சார்ந்த விளையாட்டு அல்ல. மூன்றாவது நபரால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு விளையாட்டு அந்த ப்ரோக்ராம் செட் செய்பவர்கள் வெளிமாநிலத்தில் இருப்பவர்கள் என்பதால், அவர்களை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை இருக்கிறது. அதற்கான தான் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிக்க: சுற்றி வந்த அமைச்சர்; விரட்டி பிடித்த விவசாயிகள்!