தமிழ்நாட்டில் ஊழல் மிகுந்த ஆட்சி நடைபெறுவதாக மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் மாநில தலைவர் அண்ணாமலை 234 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். ராமேஸ்வரம் முதல் சென்னை வரையிலான இந்த நடை பயணத்தின் தொடக்க விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்றது.
விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, என் மண் என் மக்கள் பயணத்தின் நோக்கத்தை பட்டியலிட்டார். தொடர்ந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தொண்டர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக குறிப்பிட்ட அவர், சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
எதிர்கட்சி சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி சுயநலக் கூட்டணி என்றார். சோனியா காந்திக்கு ராகுல் காந்தியை பிரதமர் பதவியில் அமர வைக்க வேண்டும் என ஆசை, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, தனது மகன் உதயநிதியை முதலமைச்சராக்க வேண்டும் என்ற ஆசையுடன் செயல்படுவதாக விமர்சித்தார். அண்டை நாடான இலங்கையில் நிகழ்ந்த பிரச்சனைக்கு திமுக, காங்கிரஸ் கூட்டணிதான் காரணம் என்றும் அமித்ஷா குற்றம்சாட்டினார்
தொடர்ந்து பேசிய அமித் ஷா, நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோலை நிறுவி தமிழுக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி. அதேபோல், பாரதியார் பிறந்த தினத்தை இந்திய தேசிய மொழிகள் தினமாக அறிவித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவரும் அவர் தான். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாசகத்தை ஐக்கிய நாடுகள் சபையில் முழங்கியவரும் பிரதமர் நரேந்திர மோடி தான் என்று பெருமிதம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 168 நாட்கள் கொண்ட நடை பயணத்தை அமித் ஷா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
<iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/CUUcsBBibCw" title="