ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் கிடையாது...மாறாக இதை செய்வோம்...அமைச்சர் சொன்னது என்ன?

ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் கிடையாது...மாறாக இதை செய்வோம்...அமைச்சர் சொன்னது என்ன?
Published on
Updated on
2 min read

கொரோனா காலத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றிய செவிலியர்களுக்கு வேறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பணி நீட்டிப்பை ரத்து செய்த தமிழக அரசு:

சமீபத்தில் கொரோனா பேரிடரின் போது ஒப்பந்த முறையில் பணியாற்றிய செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பையடுத்து, பேரிடர் காலத்தில் தன்னலம் கருதாமல் உழைத்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், செவிலியர்களுக்கு பணி  நிரந்தரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன.

விதிமுறைகளை பின்பற்றாமல் சேர்க்கப்பட்ட செவிலியர்கள்:

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ”நலம் 365” எனும் யூடியூப் சேனலை தொடங்கி வைத்த  சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்ப்பதாக கூறியவர், கடந்த 2019 ஆண்டு எம்.ஆர்.பி மூலம் 2345 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 2323 பேர் பணியில் சேர்ந்தனர். அதேபோன்று 2020 ஆம் ஆண்டில் பணிக்காக விண்ணப்பித்த 5736 பேரில் 2366 பேர் மட்டுமே பணியில் சேர்ந்தனர். ஆனால், அதிமுக அரசு இவர்களை பணியில் அமர்த்தும் போது அரசின் விகிதாச்சாரம் எதையும் பின்பற்றவில்லை. 

நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் எடுக்கப்பட்ட முடிவு:

இதனிடையே பேரிடர் காலத்தில் விதிமுறைகளை மீறி  பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரிலேயே, செவிலியர்கலுக்கு பணி நிரந்தரம் வழங்க முடியாமல் போனதாக கூறினார்.

மாற்று பணியிடம் வழங்கப்படும்:

இருப்பினும், கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றியவர்களின் நலன் கருதி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைப்படி, பொது சுகாதார துறையில் காலியாக உள்ள 2200 செவிலியர் பணியிடங்களிலும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் காலியாக உள்ள 270 இடைநிலை சுகாதார செவிலியர் பணியிடங்களிலும் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, இந்த பணியிடங்களுக்கு பணி நீட்டிப்பு செய்ய முடியாத நிலையில், கொரோனா காலத்தில் பணியாற்றிய 2301 ஒப்பந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள்  14 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி இருந்த நிலையில், தற்போது, மாற்று பணியிடம் காரணமாக அவர்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் என்பது சாத்தியமில்லை. இதனை கொரோனா கால ஒப்பந்த செவிலியர்கள் உணரவேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com