சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளருடன், பீகார் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர்.
தமிழகத்தில் மேம்பாலக் கட்டுமானம், மெட்ரோ ரயில் பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வடமாநிலத்தவர்கள் பெருமளவில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வளைதளங்களில் வீடியோக்கள் பரப்பட்டு வருகிறது.
இதையடுத்து, பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சார்ந்த 8 பேர் கொண்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட குழு, கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சென்னைக்கு வருகை தந்தனர். அப்போது அந்த குழுவினர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை ஆணையர் உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்துத்தும் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
இதனைத்தொடர்ந்து தற்போது அந்த குழுவினர் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்புவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இந்த ஆலோசனையின்போது உள்துறை செயலாளர், பொதுத்துறை செயலாளர், வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்புவை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், பீகார் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய குழுவினர், புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக கூறினர். கடந்த 4 நாட்களாக திருப்பூர், கோவை, சென்னையில் புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து ஆய்வு செய்ததோடு, தொழிலாளர்களின் அனுமதியுடன் அவரது செல்போன்களையும் ஆய்வு செய்தோம். தொடர்ந்து, அதிகாரிகள் மட்டுமின்றி தொழில்துறை பிரதிநிதிகளையும் சந்தித்து பேசியதாக கூறிய பீகார் குழு, புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.