செந்தில் பாலாஜி நீக்கத்திற்கு கூட்டணி கட்சியினா் கடும் கண்டனம்...!

செந்தில் பாலாஜி நீக்கத்திற்கு கூட்டணி கட்சியினா் கடும் கண்டனம்...!
Published on
Updated on
1 min read

செந்தில் பாலாஜி அமைச்சா் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு அமைச்சா்கள் மற்றும் கூட்டணி கட்சியினா் கடும் கண்டனம் தொிவித்துள்ளனர். 

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு சபாநாயகா் அப்பாவு வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனவும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக ஆளுநா் செயல்பட்டுள்ளார் எனவும் தொிவித்துள்ளாா். 

புதுக்கோட்டையில் செய்தியாளா்களை சந்தித்து பேசிய சட்டத்துறை அமைச்சா் ரகுபதி , செந்தில்பாலாஜியை அமைச்சா் பதவியில் இருந்து நீக்கியதற்கு கண்டனம் தொிவித்துள்ளாா். ஒரு ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது, என்ன அதிகாரம் இல்லை என்று தெரிந்து கொள்ள முடியாத சூழல் உள்ளதாகவும், ஒருவரை அமைச்சரவையில் இருந்து நீக்குவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை எனவும் தொிவித்தாா். 

அதேபோல் அமைச்சா் மனோ தங்கராஜ் அவரது ட்விட்டா் பதிவில், பாஜக அமைச்சா்கள் 78 பேரில் 33 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. ஆனால், அவர்கள் அமைச்சர்களாக தான் தொடர்கிறார்கள். இதற்கு பாஜக என்ன பதில் சொல்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளாா்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவரது ட்விட்டா் பதிவில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநா் நீக்கியது சட்டத்திற்கு புறம்பானது, மரபுகளுக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளாா். 

மாநில அரசாங்கத்தை வழிநடத்துவதும், அமைச்சர்களை நியமிப்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு உள்ள அதிகாரம் எனவும், அதில் மூக்கை நுழைப்பது ஆளுநருக்கு அரசியல் சாசனத்தின் அரிச்சுவடி கூட‌ தெரியவில்லை என்பதையே காட்டுவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளா் பாலகிருஷ்ணன் கண்டனம் தொிவித்துள்ளாா். 

நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், செந்தில் பாலாஜி செய்தது ஊழல் முறைகேடு என்றால், ஆளுநர் ஆர்.என்.ரவி செய்திருப்பது அதிகார முறைகேடு என்று செந்தில் பாலாஜியை  பதவி நீக்கம் செய்ததற்கு தனது கண்டனத்தை தொிவித்துள்ளாா்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com