மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணைகட்ட கர்நாடகா தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால், தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு வெகுவாக குறைவதோடு டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் முக ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து அணைகட்ட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினார். மேலும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசிடம் தெரிவிக்காமல் கர்நாடகாவுக்கு மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கப்படாது என்று மத்திய அரசு சார்பில் உறுதிமொழி வழங்கப்பட்டது.
ஆனாலும் கர்நாடக அரசு தொடர்ந்து மேகதாது அணை கட்டும் நடவடிக்கையில் முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில், மேகதாது அணை கட்டும் பிரச்சினை தொடர்பாக விவாதிப்பதற்காக நாளை சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார். தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, பாஜக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய 13 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். கூட்டத்தில், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு எடுக்க வேண்டிய சட்டப்பூர்வ முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.