"ஆளுநர் ஒரு ஊடு பயிர் மாதிரி தான், முக்கியமான பயிர் கிடையாது" கே எஸ் அழகிரி விமர்சனம்!

"ஆளுநர் ஒரு ஊடு பயிர் மாதிரி தான், முக்கியமான பயிர் கிடையாது" கே எஸ் அழகிரி விமர்சனம்!
Published on
Updated on
1 min read

வேலூரில், கே எஸ் அழகிரி, ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த ஆளுநரை திரும்ப பெறவில்லை என்றால், அவர் மிகுந்த சிரமங்களுக்கு உட்படுவார், என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூரில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி, சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தனியார் ஓட்டல் ஒன்றில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், ஆளுநரை விமர்சித்து பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, தமிழக ஆளுநர் குறித்து ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆளுநர்களின் செயல்பாடுகளை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அதைவிட நாகரீகமாக அதே நேரத்தில் அழுத்தமாகவும் கடிதத்தை எழுத முடியாது. அந்த அளவுக்கு முதல்வர் எழுதியிருக்கிறார். அதை நான் பாராட்டுகிறேன். அந்தக் கடிதத்தில் எழுதியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. இதற்குமேல் ஒரு மாநில அரசு தனது கருத்தை சொல்லுதல் இயலாது, என முதல்வரை புகழ்ந்து பேசியுள்ளார்.

மேலும், ஆளுநரும் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. மரபுகளுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. அவருக்கு என்று தனிப்பட்ட அதிகாரங்கள் எதுவும் கிடையாது. ஆளுநர் என்பவர் ஒரு ஊடு பயிர் மாதிரி தான், முக்கியமான பயிர் கிடையாது. ஆனால், இது ஆளுநருக்கு புரியவில்லை. எனவே சுய அதிகாரம் இல்லாத தன்னால் எதுவும் செய்ய முடியாத தனக்கென்று ஒரு பிரத்தியாக வரம்பு இல்லாமல் செயல்படுகிற ஒரு ஆளுநர் ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்து கீழே விழுவது பரிதாபத்திற்குரியதாக உள்ளது, என விமர்சித்துள்ளார்.

மேலும், இதுவரை அவர் மூன்று நடவடிக்கை எடுதுள்ளார். ஆனால், மூன்றிலுமே அவர் பின்வாங்கியுள்ளார். அல்லது செயல்பட முடியாமல் போனார். இது ஆளுநர் மாளிகைக்கு அழகு அல்ல. ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்பதுதான் தமிழக காங்கிரஸ் கட்சியின் கருத்து. தமிழக முதலமைச்சரும் அதைத்தான் மையமாக சொல்லி இருக்கிறார். அவர்கள் அவ்வாறு ஆளுநரை திரும்ப பெறவில்லை என்று சொன்னால் ஆளுநர் எதிலும் பங்கெடுக்க முடியாத ஒரு அரசாக இது போய்விடும். இது ஆளுநர் பதவிக்கு அழகல்ல. அவர் மிகுந்த சிரமங்களுக்கு உட்படுவார் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம், எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com