தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை அதிகளவில் பெற்றிருக்கும் நடிகர் என்றால் அது விஜய் தான். நடிகர் விஜய்க்கு கார்கள் மீது அளவுக்கதிகமான காதல் உண்டு.
பிஎம்டபுள்யூ எக்ஸ் 5, பிஎம்டபுள்யூ எக்ஸ் 6, பிஎம்டபுள்யூ எக்ஸ் 5 என்று கார்களை வாங்கிய அவர், ரோல்ஸ் ராய்ஸ் காரை சொந்தமாக வாங்கிய பிறகு தான் வாகனங்கள் மீது அவருக்கு ஆர்வம் அனைவருக்கும் தெரியவந்தது. இந்திய ரூ. 3 கோடி மதிப்பிலான இந்த காரை ஆடம்பரத்தின் உச்சம் எனலாம். 6.6 லிட்டர் ட்வின் டர்போ வி12 எஞ்சின் கொண்ட இந்த கார் 570 பிஎச்பி பவர் மற்றும் 780 என்.எம் டார்க் திறனை வழங்கும். இங்கிலாந்தில் இருந்து 2012ல் இறக்குமதி செய்த ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு வரி விதிக்க தடை கேட்டு வழக்குத் தொடர்ந்தார் நடிகர் விஜய்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் நடிகர் விஜய்க்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தார்.
நடிகர்கள் உண்மையாக ஹீரோக்களாக இருக்க வேண்டும். நிஜவாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது. சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. வரி செலுத்துவது என்பது நன்கொடை கொடுப்பது போன்றது அல்ல, நாட்டிற்கு செய்ய வேண்டி கட்டாய பங்களிப்பு என்று தனது அதிருப்தியை தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் நடிகர் விஜய்க்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்ததோடு, அந்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.