கடந்த அதிமுக ஆட்சியின் போது, பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் வரை பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வேலையும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட 4 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேருக்கு முன் ஜாமின் வழங்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்ய போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். இதனால் ராஜேந்திர பாலாஜி எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி பெங்களூரில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தேவைப்பாட்டால் ஒரு தனிப்படை குழு பெங்களூர் செல்லும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டிருப்பதால், ராஜேந்திர பாலாஜி எந்தநேரமும் கைதாகக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.