விளக்கமாறால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டும், கிழிந்த பாயால் அடிதுக் கொண்டும், உயிரோடு இருந்தவரை இறுதி ஊர்வல ரதத்தில் வைத்து தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக அழைத்து வந்து, ஒரு கிராமம் வினோத திருவிழாவை கொண்டாடியுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அணியாப்பூரில் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பழைமையான புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறும். ஆனால் சமீபத்தில் கொரோனா பெருந்தொற்று, அதன்பின் கோவில் புனரமைப்பு பணி என்பதால் கடந்த 6 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை.
கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் முடிவுற்ற நிலையில் இந்த ஆண்டு திருவிழாவை வெகு விமரிசையாக நடத்திட அணியாப்பூர், வெள்ளாளபட்டி, தவளவீரன்பட்டி ஆகிய கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் 3 ம் தேதியில் தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.
நேற்று பாடை, வேஷம், படுகளம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. திருவிழாவில் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திட இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை, ஆண்கள் முதல் பெண்கள் வரை ஒருவருக்கொருவர், நாங்கள் சலைத்தவர்கள் அல்ல என்று சொல்லும் அளவில் கலர் பொடிகளை தூவி வண்ண வண்ண முகங்களில் உலா வந்தனர். இது ஒரு புறம் இருக்க தலையில் முட்டையை அடிப்பது, ஒருவரை ஒருவர் விளக்கமாறால் அடித்துக் கொள்வது, வீட்டில் உள்ள கிழிந்த பாயை எடுத்து வந்து அடிப்பது என வித்யாசமான திருவிழாவாக கொண்டாடியுள்ளனர்.
இப்படி அனைவரும் தங்கள் விரும்பும் வகையில் மகிழ்ச்சியை வெளிபடுத்திக் கொண்டிருக்க பாடை வேஷம் தயாரானது. ஒரு மனிதர் இறந்து விட்டால் அவருக்கு எப்படி இறுதிச் சடங்கு செய்வார்களோ, அதே போல் அணியாப்பூரைச் சேர்ந்த தங்கவேல (78) என்ற முதியவரை கோவிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க முறைப்படி அழைத்து வந்து, இறுதி ஊர்வல ரதத்தில் வைத்து, இறந்தவரை போல் அனைத்து காரியங்களும் செய்து கோடி எடுத்துப் போட்டு தாரை தப்பட்டை முழங்க வீடு வரை உறவு என்ற பாடல் ஒழிக்க இறுதி ஊர்வலம் தொடங்கியது.
ஊர்வல ரதத்திற்கு முன் அனைவரும் ஆடிப் பாடி மகிழ்ச்சியை வெளிபடுத்த அதற்கு முன் தங்களின் விருப்பம் போல் விதவிதமான வேடங்களை போட்டுக் கொண்டு முன் செல்ல, அதைத் தொடர்ந்து இறுதி ஊர்வல ரதம் சென்றது. கோவில் அருகே உள்ள வளாகத்திற்கு சென்றதும் சிவன் - பார்வதி வேடமிட்ட இருவர் வந்து விபூதி போட்டு இறந்ததாக கருதபபட்டு அழைத்து வந்தவரை மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பியுள்ளனர்.
நேற்றிக்கடனை நிறைவேற்றிடும் பொருட்டு இந்த பாடை வேஷம் போட்டு வருவதாக கூறுகின்றனர். மதியம் தொடங்கிய நிகழ்ச்சியின் மற்றொரு அம்சமாக படுகளம் நடைபெற்றது. கோவில் முன்பு 4 பேர் படுத்திருக்க ஒப்பாரி வைத்து, தப்படித்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற பின் அவர்கள் நள்ளிரவில் எழுப்பப்பட்டனர்.
விளக்கமாறு அடி, வண்ண வண்ண முகங்கள், சிறுசு முதல் பெரிசு வரை பஞ்சமில்லாத ஆட்டம், பாடையில் உயிருடன் உள்ளவரின் ஊர்வலம், படுகளத்தின் மகத்துவம் என எல்லாமே மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வாகவும், அனைவரின் கவனத்தை ஈர்க்கும் தத்ரூப நிகழ்வாக இந்த திருவிழா அமைந்துள்ளது.