கோவையில் நடைபெறும் சட்டவிரோத கனிமவளக் கொள்ளை தொடர்பாக அடுத்தகட்ட நகர்வு குறித்து ஒது வார காலத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் நேற்று நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, கோவை மாவட்டத்தில் நடைபெறும் கனிம வளகொள்ளை தொடர்பாக கடந்த முறை போராட்டம் நடத்தி காலக்கெடு கொடுத்ததாகவும் பிறகு அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கனிம வள கொள்ளை நிறுத்தப்பட்டதாகவும் கூறினார். இந்நிலையில் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போன்று தற்போது கொள்ளை துவங்கி உள்ளதாகவும் அப்போது அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், மீண்டும் அரசு இயந்திரத்துடன் போராடுவதா என்ற கேள்வி இருப்பதாகவும் இதற்கான நிரந்தர தீர்வு வரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறியதுடன் இரண்டு மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தி அதிகபட்சம் ஒரு வார காலத்திற்குள் இதற்கான ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். கடந்த முறை அரசு அதிகாரிகள் கொடுத்த உறுதியின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டதாகவும் ஆனால் அதிகாரிகள் வாக்குறுதி அளித்தபடி நடக்காததால் ஒரு வார காலத்திற்குள் போராட்டம் குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து தமிழ்நாட்டில், ஒரு பக்கம் தேர்வு என்பது ஒரு பெயரளவிற்கு மட்டுமே நடத்தப்படுவதாகவும் அனைத்து இடங்களிலும் லஞ்ச லாவணியம் இருப்பதாகவும் குற்றம் சாட்டிய அண்ணாமலை, திமுக அமைச்சராக இருக்க கூடிய செந்தில் பாலாஜி tnstc நடத்திய தேர்வுக்கு பணம் வாங்கி பதவி கொடுத்ததாகவும் கூறினார்.
மேலும், இப்படிப்பட்ட அமைச்சர் அமைச்சரவையில் இருக்கும் பொழுது எப்படி அரசு இடங்களுக்கு நேர்மையான முறையில் தேர்வு நடத்தப்படும் என்றும் கேள்வி எழுப்பினார். மக்கள் ஒருபுறம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் எனவும் நாங்களும் தோண்டத்தோண்ட குப்பையை போன்று இவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறோம் இதை மக்கள் மன்றத்தில் வைக்கிறோம் எனவும் கூறினார்.