அமைச்சர் பேச்சில் திருப்தி அளிக்கவில்லை; தங்களது போராட்டம் தொடரும் ; ஆசிரியர் சங்கத்தினர் அதிரடி!

Published on
Updated on
1 min read

இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை ஆய்வு செய்ய 3 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவர்களுடன் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய 3 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்தை அடுத்து, அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவொளி மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோருடன் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ், பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றார். இதேபோல் அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்று,ம் இதனை அரசே செலுத்தும் என்றும் கூறினார். இதேபோல், டெட் தேர்வில் வெற்றி பெற்று காத்திருக்கும் ஆசிரியர்களுக்கான வயது வரம்பு பொது பிரிவினருக்கு 53 ஆகவும், இதர பிரிவினருக்கு 58 வயதாகவும் உயர்த்தப்படும் என்றார்.

இதேபோல், இடைநிலை ஆசிரியரிகளின் சம வேலைக்கு  சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும், இந்த குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். ஆகவே, தமிழ்நாட்டில் நிலவும் கடும் நிதி நெருக்கடிக்கு இடையே அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால் ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆனால், சம வேலை சம ஊதியம் என்ற தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து போனதால் தங்களது போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தங்களை முழு நேர ஆசிரியர்களாக நியமிக்கும் வரை தங்களது போராட்டத்தை விடப்போவதில்லை என பகுதிநேர ஆசிரியர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், தங்களின் கோரிக்கை குறித்த அரசாணை பிறப்பிக்கப்படும் வரை தங்களது போராட்டம் சாகும் வரை தொடரும் என டெட் ஆசிரியர் சங்கத்தினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com