ஒடிசாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் உட்பட 3 ரயில்கள் மோதி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்ததில் பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயிலும் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த பல பயணிகள் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு பணியினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனா். சுமார் 60க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மற்றும் அங்குள்ள பேருந்துகள் மூலமும் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
இந்த நிலையில் ரயில் விபத்தால் இதுவரை 900-க்கும் மேற்பட்டோா் காயமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சுமார் 233 பேர் உயிாிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ஒடிசா முதலமைச்சா் நவீன் பட்நாயக் இன்று சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை பாா்வையிடவுள்ளாா். மேலும் ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசாிக்கப்படுவதாகவும், மாநிலம் முழுவதும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அவா் அறிவித்துள்ளாா்.
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரயில்வே துறை சார்பாக தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மேலும் பலத்த காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிக்காக 2 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமா் மோடி அறிவித்துள்ளார். மேலும் ரயில் விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதை கண்டறிய உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தொிவித்த அவா் விபத்துக்கான மூலக்காரணத்தை கண்டறிவது மிகவும் முக்கியமானது எனவும் தொிவித்தாா்.
இதற்கிடையே ஒடிசா முதலமைச்சா் நவீன் பட்நாயக்குடன் தொலைபேசியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.
கோரமண்டல் ரயிலில் சென்னை வர 800-க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த ரயிலில் 100-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டை சோ்ந்தவா்கள் பயணித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் மீட்பு மற்றும் உதவிப்பணிகளுக்காக தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் குழு இன்று ஒடிசா செல்லவுள்ளனா். இந்நிலையில் ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் ராஜீவ் காந்தி, கீழ்பாக்கம், ஸ்டான்லி ஆகிய மருத்துவமனைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ரயிலில் பயணித்தோர் விவரங்களை அறிந்துகொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் அவசர கால கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ரயில் விபத்து காரணமாக ஹவுராவில் இருந்து இயக்கப்படும் சென்னை மெயில் ரயில் உட்பட மொத்தம் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், 7 ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டும் உள்ளது. மேலும் ஒடிசாவில் 10-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.