இன்னும் பதினைந்து நாளில் 1021 மருத்துவர்களுக்கும் 980 மருந்து ஆளுநர்களுக்கும் முதல்வர் பணியானை வழங்குவார் என கோவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளி பிரிவின் கட்டண அறை, விஷ முறிவு சிறப்பு மருத்துவ மாநில பயிற்சி மையம் ஆகியவற்றை இன்று திறந்து வைத்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கோவையில் 26 அறைகளுடன் கூடிய கட்டண சிகிச்சை அறை துவங்கப்பட்டுள்ளது.
சேலம், கோவையில் கட்டண வார்டு துவங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது தற்போது துவங்கப்பட்டுள்ளது. இதில் சூப்பர் டீலக்ஸ், டீலக்ஸ், சாதாரண வார்டு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. கட்டணங்கள் சாதாரண வார்டுக்கு ஆயிரம் ரூபாயும், டீலக்ஸ்க்கு இரண்டாயிரம் ரூபாயும், சூப்பர் டீலக்ஸ்க்கு மூன்றாயிரம் ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. என தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் முதல்வர் நகராட்சி, மாநகராட்சி என பிரித்து நகர்ப்புற நல வாழ்வு மையங்களை துவங்கி வைத்துள்ளார். 708 மையங்கள் துவங்கி வைக்க முடிவெடுத்து ஓராண்டில் 500 மையங்கள் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கோவையில் 65 மையங்கள் திறக்க முடிவு எடுத்து 49 மையங்கள் முதல்வர் திறந்து வைத்துள்ளார். 18 ஆக இருந்த அரசு தலைமை மருத்துவமனை கடந்த இரண்டு ஆண்டில் 25 மருத்துவமனையாக உயர்ந்துள்ளது. செவிலியர் பயிற்சி கல்லூரிகள் ஆறு இருந்த நிலையில் 11 புதிதாக துவங்கப்பட்டுள்ளது எனக் கூறினார். முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் கோவை பெரிய அளவில் பயன்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர் காப்பீடு திட்டம் தொடர்பாக புகார்கள் இருந்தால் தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், 4300 காலி பணியிடங்களை நிரப்பி உள்ளதாக குறிப்பிட்ட அவர், 1021 மருத்துவர்களை நிரப்ப நேர்காணல் நடத்த அழைப்பு கொடுத்து 25 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளதாகவும், இதன் பொதுத்தேர்வுக்கான முடிவு 15 நாளில் வெளிவரும் என தெரிவித்துள்ளார். அதன் பின் 1021 மருத்துவர்களும் 980 மருந்து ஆளுநர்களும் என ஒரே நாளில் 2000 பேருக்கு முதல்வர் பணியானை வழங்குவார் என தெரிவித்தார்.