எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழக மீனவர்கள் கைது:
தமிழக மீனவர்கள் அவ்வப்போது எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, கைது செய்து வரும் இலங்கை கடற்படையினர், படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்தவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், மீனவர்களின் படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், அவர்களை காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். விசாரணைக்கு பின்னர் 14 தமிழக மீனவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிக்க: களமிறங்கிய மனித உரிமை ஆணையம்..! கால்பந்து வீராங்கனை மரணம்..!
தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்:
இதனிடையே, கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், மீனவர் ஜான்சன் என்பவருக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. மதுரை தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கண்ணில் 90% நரம்புகள் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், அவருக்கு கண் பார்வை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மீனவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.