தந்தை பெரியாரின் 146-வது பிறந்த தினம் இன்று!

1879 செப்டம்பர் 17ம் தேதியன்று பிறந்த ஈரோடு வெங்கடநாயக்கர் ராமசாமியே தந்தை பெரியார் என்ற அடையாளத்துடன் விளங்கி தமிழ்நாட்டின் பெருமையை தரணியில் ஏற்றினார்.
தந்தை பெரியாரின் 146-வது பிறந்த தினம் இன்று!
Published on
Updated on
2 min read

வேர் விட்டு வளர்ந்து மண்ணை நாசம் செய்யும் கருவேல மரம் போல, ஏன், அதை விட அதிகமாய், மனித மனங்களை நாசம் செய்யும் விதமாக கொடிய நச்சுத்தன்மை கொண்டது மூட நம்பிக்கை.மூட நம்பிக்கை என்பதை ஒழிப்பதே முதல் வழி... இதற்கு கல்விதான் முகவரி.. ஆனால் இன்றைக்கு படிப்பினை போதிக்கும் கல்வி நிலையங்கள் வரையிலும் நுழைந்திருக்கிறது மூட நம்பிக்கை..

இத்தகைய தீயவற்றை தீயிட்டு கொளுத்தவும், மூட நம்பிக்கைப் பேச்சாளர்களை கிலி கொள்ள வைக்கும் அளவுக்கு மிரண்டு போவதைக் கண்டாலேயே தெரிந்திருக்கும் இன்றும் பெரியார் வாழ்கிறார் என்று...

1879 செப்டம்பர் 17ம் தேதியன்று பிறந்த ஈரோடு வெங்கடநாயக்கர் ராமசாமியே தந்தை பெரியார் என்ற அடையாளத்துடன் விளங்கி தமிழ்நாட்டின் பெருமையை தரணியில் ஏற்றினார். 1919-ம் ஆண்டு காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்த தந்தை பெரியார், 1921-ம் ஆண்டு கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் இறங்கினார். பின்னர் 1922-ம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார்.1924-ம் ஆண்டு வைக்கம் போராட்டத்தில் பங்கேற்று சிறை தண்டனை பெற்றவர் வைக்கம் வீரர் என்ற நீங்கா அடையாளத்தை பெற்றார். 1925-ம் ஆண்டு வகுப்பு வாரிய பிரதிநிதித்துவ தீர்மானம் நிறைவேற்றப்படாத காரணத்தால், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார்.

பிராமணப் புரோகிதர்கள் அல்லாத சமயச் சடங்கு அல்லாத திருமணங்கள், ஆணும் பெண்ணும் சமம், சாதி மறுப்பு திருமணம், கைம்பெண் திருமணம், குடும்பக் கட்டுப்பாடு, தேவதாசி முறைகளை ஒழிப்பது, குழந்தைத் திருமணத்திற்கு தடை உள்ளிட்ட எத்தனையோ சீர்த்திருத்தங்களை தன் சுயமரியாதை இயக்கத்தின் மூலம் நிறைவேற்றப் போராடினார்.பின்னர் 1944-ம் ஆண்டு திராவிடர் கழகத்தை நிறுவியவர் முழுக்க முழுக்க மக்கள் நலனையே குறிக்கோளாய் இருந்தார். பொது வாழ்க்கையில் இணைந்தவர்களுக்கு ஓய்வே ஏது எனக் கூறும் வகையில், உயிருக்கு போராடும் இறுதி காலம் வரையிலும் பெரியாரின் ஒவ்வொரு வார்த்தையும், சமூகத்தில் மாற்றத்தை விதைத்தது.

தந்தை பெரியாரின் பெயர் இன்றைக்கும் இந்த சமூகத்தில் வாழும் குறிப்பிட்ட சிலரின் உள்ளம் நடுங்குவதை அறியலாம். நானே சொன்னாலும், அதை அப்படியே நம்பி விடாதே.. புத்தியைக் கொண்டு ஆராய்ந்து சரி என்றால் ஏற்றுக் கொள் எனக் கூறினார் பெரியார்.இந்த பகுத்தறிவுக் கொள்கையை அறிந்து பின்பற்றியவர்களுக்கு தந்தை பெரியார் இருளில் தென்பட்ட கலங்கரை விளக்கமாய் தெரிகிறார். சாதிப் பாகுபாடு, தீண்டாமை, மூட நம்பிக்கை, பெண்ணடிமைத்தனம் உள்ளிட்டவை சமூகத்தை மெல்ல மெல்ல அழித்து வரும் போது, இந்த தேவையற்ற களைகளை பிடுங்கி அப்பால் போட்டவர் தந்தை பெரியார்.

பெரியார் என்பவரை விடுத்து இந்தியாவின் அரசியல் வரலாறும் முழுமையடைவதில்லை. இந்திய ஜனநாயகமும், கூடவே சமூகநீதியின் சரித்திர பக்கங்களும் நிறைவடைவதில்லை.பெரியாருக்கு பின்னால் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி என பலரும் வந்துள்ளனர். இன்னும் எத்தனை பேர் இந்த மண்ணில் திராவிடத்தையும், சமூக நீதியையும் நிலைநாட்டினாலும் அவர்களுக்கெல்லாம் முன்னோடி தந்தை பெரியார்.

பெரியாரின் ஊன்றுகோல் அறிவார்ந்தவர்களுக்கு வழிகாட்டியாகவும், பிற்போக்குவாதிகளுக்கு பிரம்பாகவும் மாறியது. 1973-ம் ஆண்டு சென்னை தியாகராயநகரில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றவர் 94-வது வயதில் காலமானார். இன்றைக்கு கண்ணயரும் நேரத்தில் கலவரம் உண்டு செய்வதற்கு கயவர்கள் காத்திருந்தாலும், அவ்வாறானவர்களையும், மூட நம்பிக்கைப் பேச்சுக்களை பரப்பி மக்களிடம் பேதங்களை பரப்புவர்கள் பதுங்குவதிலும், பெண்களை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கவாதிகள் அடங்கி பணிவதன் மூலமும் பட்டவர்த்தமாக புலப்படுகிறது தந்தை பெரியார் வாழ்கிறார்.. வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்று...

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com