திருப்பதி லட்டில் அன்று மாட்டுக் கொழுப்பு இன்று குட்கா பாக்கெட்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக வெளியான தகவல் பக்தர்களை அதிர வைத்தது.
திருப்பதி லட்டில்  அன்று மாட்டுக் கொழுப்பு இன்று குட்கா பாக்கெட்!
Published on
Updated on
1 min read

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக வெளியான தகவல் பக்தர்களை அதிர வைத்தது.இந்த நிலையில் தற்போது லட்டில் குட்கா பாக்கெட் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெகன் மோகன் ரெட்டி - சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு இடையே நடந்த இந்த போட்டியில் திருப்பதி கோயில் குறித்தும், அங்கு வழங்கப்படும் பிரசாதம் குறித்தும் மக்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் எழுந்தன.

இதையடுத்து செப்டம்பர் 23-ம் தேதியன்று திருப்பதி கோயிலின் புனிதத்தை மீட்டெடுக்கும் வகையில், சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, புனிதநீர் தெளிக்கப்பட்டது. மேலும், ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண், 11 நாட்கள் விரதம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மாட்டுக் கொழுப்பு விவகாரம் இன்னும் தணியாத நிலையில் தற்போது லட்டுவில் போதைப் பொருளான குட்கா பாக்கெட் கிடந்ததாக புதிய புகார் எழுந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் கம்மம் ரூரல் மண்டலம் கொல்லகுடேம் பகுதியைச் சேர்ந்த பத்மா என்பவர் கடந்த 19-ம் தேதி உறவினர்களுடன் திருப்பதி சென்றிருந்தார்.

ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு லட்டு வாங்கியவர், வீட்டுக்கு வந்து பிரசாதத்தை பிரித்தார். அப்போது லட்டுக்குள் குட்கா பாக்கெட் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர், இதனை வீடியோ பதிவு செய்து கொண்டார்.

புனிதமான ஏழுமலையான் கோயிலில் இவ்வாறு இருப்பது கவலையளிப்பதாக கூறியவர், ஆந்திர மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் முன்னாள் அறங்காவலர் திருப்பதி கோயிலில் சூடம் ஏற்றி சத்தியம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஏழுமலையான் கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு, குட்கா போன்றவை கலக்கப்பட்டதாக புகார்கள் எழுந்து வருகிறது. இது எந்த விதத்திலும் உண்மையல்ல, ஒரு வேளை உண்மையாக இருந்தால் என் குடும்பமே நாசமாய் போகட்டும் என ஏழுமலையான் சன்னதியில் வைத்து அவர் சத்தியம் செய்தார்.

அதோடு குட்கா கலக்கப்பட்டதாக கூறப்பட்ட பத்மா தங்கியிருக்கும் கொல்லகுடேம் கிராமத்திற்கும் திருப்பதி தேவஸ்தான குழுவினர் நேரில் செல்ல உள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com