”சமாஜ்வாதி கட்சியின் தலைவர்களிடமிருந்து சட்டம்-ஒழுங்கை எதிர்பார்ப்பது என்பது கடினம்” என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உ.பி சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
உத்திர பிரதேச மாநிலத்தில் இன்று மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் அவர்களின் அலுவலகத்திலிருந்து உ.பி.,யின் சட்டமன்ற பேரவை வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.
நடைப்பயணத்தின் போது, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மாநிலத்தில் நிலவும் மோசமான சட்டம்-ஒழுங்கு நிலைமை போன்ற பிரச்சனைகளை குறித்து கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவார்கள் எனக் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஊர்வலம் செல்ல தேவையான அனுமதிகளை சமஜ்வாதி கட்சி தலைவர் பெறவில்லை என்று உ.பி.,யின் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதனால் அவர் மாநில சட்டசபைக்கு வருவதற்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படா வகையில் அவர்களுக்கு ஒரு பாதை ஒதுக்கப்பட்டது எனவும் ஆனால் அவர்கள் அந்த வழியே பயணிக்க மறுத்ததால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளனர்.
“உ.பி., சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. இந்த அமர்வின் மீது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். தண்ணீர் தட்டுப்பாடு உள்பட பல பிரச்னைகள் குறித்து எங்கள் அரசு விவாதிக்கும். இந்த மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும் நாங்கள் பதிலளிப்போம்" என்று ஆதித்யநாத் கூறியுள்ளார்.
சமாஜ்வாதி கட்சியை கடுமையாக தாக்கி பேசிய முதலமைச்சர் யோகி, “எதிர்க்கட்சிகள் ஜனநாயக வழியில் கேள்விகளைக் கேட்டால் பாதிப்பு இல்லை. யாருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் ஊர்வலத்திற்கு முன்கூட்டியே சமாஜ்வாதி முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும். சமாஜ்வாதி கட்சியின் தலைவர்களிடமிருந்து சட்டம்-ஒழுங்கை எதிர்பார்ப்பது என்பது கடினம்,” என்று கூறியுள்ளார் யோகி.