மக்களிடமும் நம்பிக்கையை இழந்த உத்தவ் தாக்கரேவின் அரசியல் எதிர்காலம் என்ன!!!

மக்களிடமும் நம்பிக்கையை இழந்த உத்தவ் தாக்கரேவின் அரசியல் எதிர்காலம் என்ன!!!
Published on
Updated on
2 min read

மகராஷ்ட்ராவில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகத்தில் ஈடுபட்டார். முதலில் தன்னுடன் 12 சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலகத்தை தொடங்கிய அவர், பிறகு சிவசேனாவில் உள்ள 55 சட்டமன்ற உறுப்பினர்களில் 40 உறுப்பினர்களை தன் பக்கம் கொண்டு வந்து விட்டார். இதனையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்று மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார். 

பஞ்சாயத்து தேர்தலும் வெற்றியும்:

மகாராஷ்டிராவில் 608 கிராம பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் தற்போது நடைபெற்றது. தேர்தல்களின் முடிவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 20 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. அதே நேரத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 28 இடங்களை வென்றுள்ளது.  இதன் மூலம் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு பின்னடைவு தெரிய வந்துள்ளது. 

ஏக்நாத் ஷிண்டே அணி அதன் பலத்தை காட்டி உள்ளது.  இதுமட்டுமின்றி இந்த தேர்தலில் 125 இடங்களை கைப்பற்றி பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. சரத் பவாரின்  தேசியவாத காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று 188 இடங்களை கைப்பற்றியுள்ளது.  காங்கிரசுக்கு 53 இடங்கள் கிடைத்துள்ளன.  

பாஜக:

மகாராஷ்டிராவின் பாஜக மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவான்குலே கூறுகையில் பாஜக 259 கிராம பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றதாக தொடர்ந்து கூறி வருகிறார்.  அதனோடு ஷிண்டே அணியும் 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். 

பஞ்சாயத்து தேர்தல்:

கிராம பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் கட்சியின் சின்னத்தில் நடத்தப்படுவதில்லை. ஆனால் அரசியல் கட்சிகள் அவர்களுக்கு ஆதரவான வேட்பாளர்களை தேர்தல்களில் நிறுத்துகின்றனர்.  இதனால் பஞ்சாயத்து தேர்தல்களும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. பஞ்சாயத்து தேர்தல்கள் சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற தேர்தல்களுடன் நேரடியாக தொடர்புடையவை அல்ல. ஆனால் அவை கிராமப்புறங்களின் அரசியல் கட்சிகளின் ஆதரவைத் தெளிவாக காட்டுகின்றன. 

உத்தவ் தாக்கரே கவலை:

தற்போது இந்த முடிவுகளை பாஜகவும், ஏக்நாத் ஷிண்டே அணியும் அவர்களுக்கு சாதகமாகச் சொல்லத் தொடங்கியுள்ளன.மறுபுறம், சிவசேனாவுக்கு 20 இடங்கள் மட்டுமே கிடைத்திருப்பது கவலையளிக்கிறது.தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் உத்தவ் தாக்கரே தற்போது தேர்தலிலும் ஏமாற்றத்தை சந்தித்து இதன்பிறகு கட்சியை எப்படி கையாள்வார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

ஏக்நாத் ஷிண்டே:

தேர்தல் குறித்து ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், ”பாஜக மற்றும் எங்கள் கூட்டணிக்கு இது ஒரு தொடக்கம்.  மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.” என்று கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com