மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பிரச்னையை பிரதமர் நரேந்திர மோடி புறக்கணித்ததாக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணித் தலைவர் சஞ்சய் ராவத் விமர்சத்துள்ளார்.
நல்ல அடையாளமா?:
ஒருபுறம் ரஷியா-உக்ரைன் போரில் பிரதமர் நரேந்திர மோடி நடுநிலை வகிக்கிறார் என்றால் மறுபுறம் மகாராஷ்டிரா-கர்நாடகா எல்லைப் பிரச்சனையில் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறார் எனவும் இது ஒரு நல்ல அரசியல்வாதியின் அடையாளம் அல்ல என்றும் ராவத் கூறியுள்ளார்.
நசுக்க முடியாது:
மகாராஷ்டிர நாளிதழான சாமானாவில் வெளியான அவரது கட்டுரையில் ராவத், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா இடையேயான எல்லைப் பிரச்சனை மனித நேயத்திற்கான போராட்டம் என்றும், இரு மாநில மக்களுக்கும் அரசுக்கும் இடையேயான சண்டை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் பெலகாவி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மராத்தி பேசும் மக்களின் போராட்டத்தை கொடூரமாக நசுக்க முடியாது என்று கூறியுள்ள ராவத் மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாவிட்டால், நீதிக்கு எங்கு செல்வது என கேள்வி எழுப்பியுள்ளார்.
நடுநிலைப்பாடு?:
மாநிலங்களவை எம்.பி., ராவத் கூறுகையில், ”மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த பிரச்னையை தீர்க்க முயற்சி எடுத்துள்ளார் என்பது நல்ல விஷயம் தான் என்றாலும் மத்திய அரசு நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்குமா என்பதுதான் கேள்வி.” எனக் கூறியுள்ளார் ராவத்.
பொம்மைக்கு ஆலோசனை:
தொடர்ந்து ராவத்,”மகாராஷ்டிராவுக்கு எதிராக ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுவதற்கு பதிலாக, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, பெலகாவியில் உள்ள மராத்தி பேசும் மக்களின் தலைவர்கள் மற்றும் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சர்ச்சையை தீர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் மகாராஷ்டிராவின் பகுதிகளை உரிமை கொண்டாடும் முதலமைச்சர் பொம்மையின் ஆக்ரோஷமான அணுகுமுறையை எதிர்கொள்ள முடியாத அளவிற்கு மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மிகவும் பலவீனமாக உள்ளார் என்பது தெளிவாகியுள்ளது என்றும் ராவத் கூறியுள்ளார்.
பிரச்சினை என்ன?:
மகாராஷ்டிரா மாநிலமானது பெலகாவி மற்றும் வடக்கு கர்நாடகாவில் உள்ள எல்லைப் பகுதிகளுக்கு நீண்ட காலமாக உரிமை கோரி வருகிறது. ஏனெனில் இந்த பகுதிகளில் உள்ள மக்கள் மராத்தி மொழி பேசி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள் அடிப்படை வசதிகள் இல்லாததால் கர்நாடகாவுடன் இணைவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோரிக்கைக்குப் பிறகு, இரு மாநிலங்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக இருந்து வந்த எல்லை தகராறு மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.
-நப்பசலையார்