உத்தரப்பிரதேச மாநிலம், லகிம்பூரில் கடந்த 3ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியானார்கள்.
விவசாயிகள் தந்த புகாரின் அடிப்படையில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகனின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவம் உத்தரபிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார். முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக லகிம்பூர் கேரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சம்பவ இடத்தில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. தலைமை நீதிபதி ரமணா மற்றும் நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி அடங்கிய அமர்வு இந்த வழக்கை இன்று விசாரணை நடத்த உள்ளது.